அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப்பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனை வென்றதன் நினைவாக இருக்கும் இவ்வாலயம் 2000 ஆண்டுகள் பழமையானதாகச் சொல்லப்படுகிறது. முருகனின் இப்படைவீட்டை, சிலப்பதிகாரம் 'திருச்சீரலைவாய்' என்றழைக்கப்பட்டதாகச் சொல்கிறது.
தல சிறப்புகள்
கடுந்தவம் புரிந்து வரங்களைப் பெற்ற சூரபத்மன் தேவர்களை துன்புறுத்தினான். அவனது கொடுஞ்செயல்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள், சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர். அவர்களது வேண்டுதலையேற்று, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்க, அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். அவ்வாறு தோன்றிய முருகன் தந்தையின் கட்டளையை ஏற்று, சூரபத்திரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் ஐப்பசி மாதம்வளர்பிறை சஷ்டியன்று தனது வைர வேல் கொண்டு வதைத்து வெற்றிகொண்டார். இது நிகழ்ந்த இடமே திருச்செந்தூர் ஆகும். எனவே தான் ஒவ்வொரு வருடமும்கந்தசஷ்டி விழாவன்று 'சூரா சம்காரம்' எங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாட வேறொரு காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. சில முனிவர்கள் உலக நன்மைக்காக புத்திரன் ஒருவன் வேண்டுமென்று கருதி ஐப்பசி மாத அமாவாசையன்று துவங்கி, ஆறு நாட்கள்யாகத்தை நடத்தியிருக்கின்றனர். அந்த ஆறு நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்து வெளியானதாகவும் அந்த ஆறும் இணைந்தவனே ஆறுமுகன் எனப்படும் முருகன் ஆவார். எனவே முருகன் திருச்செந்தூரில் ஜனித்த தினமே கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
முருகப்பெருமானைத் தரிசிக்க இவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த வியாழ பகவானுக்குக் காட்சி அளித்து, அசுரர்களின் வரலாற்றை அவரிடமிருந்து கேட்டறிந்தார். தனது படைத் தளபதியான வீரவாகுவைத் சூரபத்மனுக்கு தூதனுப்பினார். ஆனால் அழிவின் விளிம்பிலிருந்த அசுரன் அதை மறுத்து யுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தான். முடிவில் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்டு, அவரது கொடியில் இடம்பிடித்து நற்பேறு பெற்றான்.
வியாழபகவானின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் தங்கிய முருகனுக்கு விஸ்வகர்மாவை அழைத்து ஆலயம் எழுப்பினார். சூரபத்மனை வெற்றி கொண்டதைக் குறிக்கும் பெயரால், செயந்திநாதர் என்றழைக்கப்பட்ட முருகப்பெருமான் பெயர் மறுவி செந்தில்நாதர் என்றும், திருச்செயந்திபுரம் என்பது திருச்செந்தூர் எனவும் மாறியதாக சொல்லப்படுகிறது.
முருகப்பெருமான் இருவேறு தோற்றங்களில் தனித்தனியே எழுந்தருளி அருளியிருப்பது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். தெற்குத்திசையைப் பார்த்தவாறு சண்முகர் என்ற பெயரிலும், கிழக்குத் திசையைக் பார்த்தவாறு பாலசுப்ரமணிய சுவாமி என்று இருவாறு வெவ்வேறு சன்னதியில் அருள் செய்கிறார்.
ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதித்தவர்கள் இவ்வாலயத்தில் வழிபட்டால் தீவினை நீங்கி பலன் பெறலாம். குழந்தைப் பேறின்றி இருப்பவர்கள், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, கோவிலை வலம் வந்தால் மக்கட்பேறை அருள்வார். வாழ்நாள் முழுவதும் தவம் செய்து கிடைக்கும் பலனை, இவ்வாலயத்தில் ஒரு நாள் உபவாசம் இருந்து முருகனை வழிபட்டால் பெறலாம் என சூதம முனிவர் கூறுகிறார்.
பன்னீர் இலை விபூதி : பன்னீர் இலையில் விபூதியை வைத்து எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.